சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மோசடி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ்க்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் பல பள்ளி நிர்வாகிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக போலீசார் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இந்த வழக்கில், திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே வழக்கில் அரசகுமார் மற்றும் சங்கப் பொருளாளர் முத்துகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், மகேஷ் மற்றும் அவரது உறவினர்களுடன் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பின்னர் மகேஷ்க்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மகேஷ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் கைது செய்யக் கூடாது போன்ற இடைக்கால உத்தரவு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பக்கூடும் என்பதால், எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். வேண்டுமானால் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறி, மகேஷ் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.