தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் முறைகேடுகள் உள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி அக்டோபர் 2 முதல் 8 வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டம் ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் ‘எஸ்.ஐ.ஆர்.’ (Special Intensive Revision) சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள், மேலும் ‘ஓட்டு திருட்டு’ போன்ற குற்றச்சாட்டுகளே இந்த போராட்டத்திற்கான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமாஜ்வாதி, சி.பி.ஐ.(எம்), சி.பி.ஐ., ராஷ்ட்ரீய ஜனதா தளம், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு கார்கே கூறுகையில், அக்.2 முதல் 8 வரை நாட்டின் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், தேர்தல் கமிஷனை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளதாக தாங்கள் கூறும் குற்றச்சாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், அக்.6 அன்று எதிர்க்கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் தேர்தல் கமிஷனை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாகவும், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தேர்தல் கமிஷனில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை விளக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதில் இண்டி கூட்டணி தலைவர்கள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.





