ப்ளைதுபாய் விமானத்தில் நடந்த கடத்தல் முயற்சியை தடுக்க முயன்றபோது காயமடைந்த இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாக சவுதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு விமானம் சவுதி அரேபியாவின் வடமேற்கில் உள்ள தபூக் நகருக்கு திருப்பிவிடப்பட்டதாகவும், அங்கு சுமித் மச்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் தூதரகம் கூறியது.
துபாயிலிருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேல் சென்ற விமானத்தில் துணை பைலட் ஒருவர் கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த முயற்சியை சுமித் மச்சார் துணிச்சலுடன் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பயணிகள் கூறுகையில், கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் அவர் போராடி விமானத்தை மீட்டதால் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாக தெரிவித்தனர். தற்போது அவர் தபூக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ரியாத்திலுள்ள இந்திய தூதரகமும், ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகமும் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சவுதி அதிகாரிகளுடன் இணைந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





