அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் இடம்பெற்றன.

மோடி வெளியிட்ட அறிக்கையில், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். இந்தியா–அமெரிக்கா இடையிலான விரிவான உத்திசார் கூட்டணியை முன்னெடுக்க தொடர்ந்து கலந்தாலோசிப்பதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்த உரையாடல் நடைபெறும் பின்னணியில், இந்தியா–அமெரிக்கா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணமாகக் கொண்டு இந்தியப் பொருட்களுக்கு 100% வரி விதிக்கலாம் என டிரம்ப் எச்சரித்துள்ள சூழலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.