தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 9ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள ‘செங்கோல்’ குறித்து பாடமாக சேர்த்துள்ளது.

புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சபாநாயகர் இருக்கை அருகே உள்ள கண்ணாடி பேழையில் செங்கோலை நிறுவினார். இது சோழர்கால ஆட்சி அதிகாரத்தின் கலாசார அடையாளமாகவும், தமிழர்களின் பாரம்பரிய பெருமையுடனும் தொடர்புடையதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில், பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து இறையாண்மை கொண்ட இந்திய அரசிற்கு அதிகார மாற்றம் நிகழ்ந்ததன் அடையாளமாக, தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோலை வழங்கினர். அப்போது பன்னிரு திருமுறையின் இரண்டாம் திருமுறையில் உள்ள ‘கோளறு பதிகம்’ பாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘நீதி தவறாத ஆட்சியின் அடையாளமாக செங்கோலை பயன்படுத்தும் பராம்பரியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழப் பேரரசு காலத்தில் தொடங்கியது’ எனவும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மீண்டும் நிறுவியதாகவும் பாடத்தில் இடம் பெற்றுள்ளது.