சென்னை
நடந்து வரும் இடைத்தேர்தல் சூழலில், தே.ஜ. கூட்டணிக்கு “துரோகம்” செய்யக்கூடாது என பா.ம.க. தலைமையிடம் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி ஆதங்கம் தெரிவித்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், தாராபுரம் இடைத்தேர்தலில் தற்போது வரை அ.தி.மு.க. முன்னணியில் இருப்பதாகவும், கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. வெற்றிக்கு பா.ம.க. முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தனர். ஆனால், இம்முறை இடைத்தேர்தலில் “யாருக்கும் ஆதரவில்லை” என பா.ம.க. அறிவித்ததால் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. பலம் குறைந்ததாகவும் கூறினர்.
மேலும், பா.ம.க. செயல்பாடுகள் த.வெ.க.-க்கு மறைமுக ஆதரவு அளிப்பதுபோல் இருப்பதாகவும், மதுராந்தகத்தில் சில பா.ம.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.-க்கு எதிராக வேலை செய்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த கள நிலவரங்களை அறிந்த பழனிசாமி மற்றும் துணை பொதுச்செயலர் கே.பி. முனுசாமி, பா.ம.க. தரப்புடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த உரையாடலில், இடைத்தேர்தலில் பா.ம.க. நேரடியாக ஆதரவு தராவிட்டாலும் இரு கட்சிகளும் தே.ஜ. கூட்டணியில் உள்ளதால், கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்படுவது கூட்டணி தர்மம் அல்ல என பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க. மற்றும் தே.ஜ. கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்; தோல்வி ஏற்பட்டால் 2029 மக்களவை தேர்தலிலும் அதன் தாக்கம் இருக்கும் எனவும் அவர் எச்சரித்ததாக தகவல்.
இதன் பின்னணியில், “த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்து சவுமியா அமைச்சராகிறார்” என்ற செய்தி குறித்து கேட்கப்பட்ட போது, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அதை “வதந்தி” என மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பா.ம.க. செயல்பாடுகள் குறித்து பா.ஜ.க. மேலிட கவனத்துக்கும் பழனிசாமி எடுத்துச் சென்றதாக அ.தி.மு.க. தரப்பு தெரிவித்துள்ளது.




