தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு முழுத் தடை விதிக்கப்படாது; ஆனால் 24 மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படாமல், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் வகையில் சமநிலையான தீர்வு தேவை என நீதிமன்றம் வலியுறுத்தியது.
நாடு முழுவதும் தீபாவளி நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒரே நாளில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, சி.எஸ்.ஐ.ஆர்–நீரி பரிந்துரைத்தபடி பேரியம் உப்பு அளவு குறைத்து உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை “பசுமை பட்டாசுகள்” உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. பரமேஸ்வர், நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும்போது டெல்லியை மட்டும் தேவையின்றி தனிமைப்படுத்தக் கூடாது என்றும், காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு உத்தரவுகளை மாற்றி அமைக்கலாம் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், நாள் முழுவதும் பட்டாசுகள் வெடித்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்; குழந்தைகள், முதியோர், நோயாளிகள் அவதிப்படுவர் என்று கூறினர். அதே நேரத்தில் முழுத் தடை விதித்தால் தீபாவளி கொண்டாடும் மக்களின் உணர்வுகள் புண்படும் என்றும் குறிப்பிட்டு, குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்கி அனுமதி வழங்கும் தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்தனர். மேலும் மத்திய அரசு முன்வைத்த சரவெடி தயாரிப்பு தொடர்பான முன்மொழிவுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. பேரியம் கலந்த பட்டாசுகள் தொடர்பான பரிசோதனை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி, வழக்கு அக். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





