ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, வி.எச்.பி. திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்கள் அமைப்பின் தென் பாரத அமைப்பாளர் பாலு சரவணகார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வேற்று மத அடையாளங்களுடன் புர்கா அணிந்து வந்த ஒரு பெண் செவ்வாய்க்கிழமை காலை கோவில் வளாகத்திற்குள், பெரிய பெருமாள் (ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான்) சன்னதி பகுதி வரை சென்றதாக கூறினார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் எந்தவித ஒப்புதலும் பெறாமல் அவரை உள்ளே அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறிய அவர், சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு மசூதி வெளியே பகிரங்க மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர்கள்மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் கோவிலில் இச்சம்பவம் நடந்தது பெரும் பாதுகாப்பு குளறுபடியாகும் என அவர் வலியுறுத்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சட்ட நடைமுறையின்படி, மாற்று மதத்தினர் கோவிலில் வழிபட விரும்பினால் தேவஸ்தான அலுவலகத்தில் ‘இந்து தெய்வங்கள் மீது நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த நடைமுறை கோவில் நிர்வாகத்தாலும் காவல்துறையாலும் முறையாக பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கோவில் தேவஸ்தான நிர்வாகமும் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.





