பஞ்சாப் அருகே சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர், எல்லை பாதுகாப்புப் படையினரால் (BSF) சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தர்ன் தாரன் செக்டாரில் உள்ள ரஜோக் கிராமப் பகுதியில் நிகழ்ந்தது. அங்கு BSF வீரர்கள் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருவர் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றதை கவனித்த பாதுகாப்புப் படையினர், உள்ளே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

எச்சரிக்கையை மீறி அவர்கள் முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து BSF துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாதுகாப்புப் படையினர் சடலங்களை கைப்பற்றி, அவர்கள் யார் என்பதையும் ஊடுருவலின் நோக்கம் என்ன என்பதையும் கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளனர். பயங்கரவாத தொடர்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.