சென்னை: கதராடைகளை மகிழ்ச்சியுடன் அணிந்து, நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தன் அறிக்கையில், கதராடை வாங்குவது ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு வழங்கும் அங்கீகாரம் என்றும், கிராமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவது கைவினைக் கலைஞர்களின் உழைப்புக்கு செலுத்தும் மரியாதை என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூரில் தயாரான பொருட்களை பயன்படுத்துவது மாநிலத்தின் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

தமிழகம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் வழியாக, கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு வகைகள் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரும் கதராடைகளையும் கிராமப் பொருட்களையும் வாங்கி, நுாற்பாளர்கள், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “கதரை தேர்ந்தெடுப்போம்; கைத்திறனை போற்றுவோம்; உள்ளூர் உற்பத்திக்கு உயிரூட்டுவோம்” எனக் கூறி, மகிழ்ச்சியுடன் கதர் அணிந்து நெசவாளர்களின் வாழ்க்கை வெற்றி பெற உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.