தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக உள்ள வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் (பணமோசடி) கோணத்தில், அமலாக்கத் துறை (ஈ.டி.) விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை வளையத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகேஷ் (48), அவரது உறவினர் மற்றும் உதவியாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொடங்கியது. தி.மு.க. செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார் (58) மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடந்த விசாரணையில், முன்னாள் அமைச்சர் மகேஷ், அவரது உறவினர் வாலாடி கார்த்திக், உதவியாளர்கள் அருண் பிரகாஷ், பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் மற்றும் அவரது உதவியாளர்கள் சரவணன், ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அரசகுமார், முத்துகுமார், மகேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 44 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பின்னணியில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து வழக்கு ஆவணங்களை ஈ.டி. பெற்றுக் கொண்டு பணமோசடி தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை வளையத்தில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





