துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தை நடுவானில் மோதச் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான துணை விமானி தீவிர இஸ்லாமிய சித்தாந்தப் போதனைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது இந்திய விமானி ஸ்மித் மச்சார் துணிச்சலுடன் செயல்பட்டு பெரும் விபத்தைத் தடுத்ததாகவும், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தியதாக கூறப்படும் நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு, சம்பந்தப்பட்ட துணை விமானி தற்போது விசாரணையில் இருப்பதாகவும், ஈரானுடன் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வாளர்கள் சில நாட்களில் கண்டறிவார்கள் எனவும் கூறினார். தாக்குதல் முயற்சியாளரின் பின்னணி மற்றும் உடந்தையர்கள் இருந்தார்களா என்பதையும் அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றார்.
இந்தச் சம்பவத்தை இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என குறிப்பிட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகமும் அதே கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.





