வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (எஸ்.ஐ.ஆர்.) கீழ் தயாராகும் வரைவு வாக்காளர் பட்டியலை மட்டும் அடிப்படையாக வைத்து, ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளை தெரிவித்துள்ளது. முறையான விசாரணையும், உரிய வாய்ப்பும் வழங்காமல் பெயர் நீக்க எந்த சட்டம் வழிவகுக்கிறது என தேர்தல் கமிஷனிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பணஜியில் உள்ள சான்டா க்ரூஸ் சட்டசபை தொகுதியில் பரேஷ் சல்கோங்கர் குடும்பத்தினர் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்த நிலையில், முகவரி மாற்றத்திற்காக பூத் நிலை அதிகாரியின் அறிவுறுத்தலின்படி ஆறு பேர் படிவம்–8 சமர்ப்பித்தனர்.

ஆனால் தேர்தல் கமிஷனின் ‘இஆர்ஓநெட்’ மென்பொருளில் இவர்களின் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தரவுகள் இல்லை எனக் கூறப்பட்டதால், விண்ணப்பத்தில் பிழை காட்டப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். மென்பொருளில் ‘நிராகரிப்பு’ என்ற ஒரே தெரிவு மட்டுமே இருப்பதால் உதவி தேர்தல் பதிவு அதிகாரி விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியாது என்றும், முதல்முறை வாக்காளர் பதிவு படிவமான படிவம்–6 சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் அமித் ஜாம்சன்டேகர் மற்றும் வால்மீகி மெனேசெஸ் அமர்வு விசாரித்தது. மென்பொருள் இடமளிக்கவில்லை என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க முடியாது என்றும், வரைவு பட்டியலை வைத்து பெயர் நீக்கினால் படிவம் 6, 7, 8 ஆகியவற்றின் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மென்பொருள்மீது தள்ளிவிடாமல் சுயநினைவுடன் முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் பலர் நீதிமன்றம் வராமல் இருக்கக்கூடும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.