குஜராத் பொது சிவில் சட்டத்திற்கு (UCC) ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அந்தச் சட்டம் மாநிலத்தில் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து, நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக குஜராத் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

மசோதா மீதான சட்டசபை விவாதத்தின் போது முதல்வர் பூபேந்திர படேல் பேசுகையில், இந்த நடவடிக்கை நாட்டின் ஒற்றுமையையும் சமூக அமைதியையும் உறுதி செய்யும் என தெரிவித்தார். பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை இந்த மசோதா பாதுகாக்கும் என உச்சநீதிமன்றம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டத்தின் படி திருமணம் மற்றும் விவாகரத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். லிவ்-இன் உறவையும், அதை முடிக்கும் போதும் அறிவிக்க வேண்டும்; அந்த உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.

மேலும், எஸ்டி (பட்டியலின பழங்குடியினர்) பிரிவினருக்கு இந்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், பரிசீலனைக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.