சவுதி அரேபியாவின் தபூக் நகரில் முதற்கட்ட மருத்துவ சிகிச்சை பெற்ற இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார், தற்போது அபுதாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், கேப்டன் மச்சாரின் உடல்நிலையை அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறினார். மேல்சிகிச்சை மற்றும் குணமடைதலுக்காக அவர் அபுதாபிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் மருத்துவமனைக்கு சென்று கேப்டன் மச்சாரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதற்கு முன் அவர் கேப்டனின் குடும்பத்தினரையும் சந்தித்து, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் உள்ள துணைத் தூதரகமும் இந்த விவகாரத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. மேலும், கேப்டன் மச்சாரின் துணிச்சலை மீண்டும் பாராட்டிய வெளியுறவுத்துறை, உலகம் முழுவதும் இருந்து கிடைத்த பாராட்டுகள் மற்றும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துள்ளது.