மணாலியில் சுற்றுலா வந்த இஸ்ரேல் பயணிகள் குழுவினர், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர்களை ஏந்தியபடி நகரில் வலம் வந்தனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

தகவலின்படி, துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற பிளை துபாய் விமானத்தில் 174 பேர் பயணித்தனர். பயணத்தின் போது சக விமானியால் தாக்கப்பட்ட நிலையிலும், நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ததாக ஸ்மித் மச்சார் குறித்து கூறப்படுகிறது.

அவரின் துணிச்சலை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராட்டியுள்ளனர். தற்போது அவர் சிகிச்சையில் இருப்பதாகவும், பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மணாலியில் பதிவான வைரல் வீடியோக்களில், இஸ்ரேல் பயணிகள் உள்ளூர் மக்களுடனும் பிற சுற்றுலாப் பயணிகளுடனும் உரையாடி, உணவருந்தி, விமானியைப் பாராட்டுவதோடு இந்திய மக்களின் நற்பண்பையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தக் காட்சிகளின் பின்னணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் “வந்தே மாதரம்” பாடல் ஒலிப்பதும் கவனம் பெற்றுள்ளது.

அவர்கள் ஏந்திய போஸ்டர்களில், “இவர் தான் கேப்டன் ஸ்மித்”, “இஸ்ரேலியர்கள் அதிகம் இருந்த விமானத்தை காப்பாற்றியவர்”, “இஸ்ரேல் மக்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள்; ஒற்றுமையாக உங்களுடன் நிற்கிறார்கள்”, “மிகவும் நன்றி” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வீடியோவை பார்த்த பலரும் விமானியின் செயலைப் பாராட்டி, அது இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.