த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தனது பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கூடுதல் சட்ட அதிகாரங்களை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
அறிக்கையின்படி, இப்படைக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புகார்கள் பெற 1091 என்ற தனி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 270 குழுக்களாகப் பிரிந்து ரோந்து மற்றும் குற்றத் தடுப்பு பணிகளில் இப்படை ஈடுபட்டு வருகிறது.
ஆனால், உள்ளூர் காவல் நிலையங்களின் பணிச்சுமை காரணமாக போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். புகார்களை விசாரித்து சந்தேகநபர்களை கண்டறியும் பணியை இப்படை மேற்கொண்டாலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் உள்ளூர் போலீசாரால் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினர்.
இதனால், புகார்களை விரைவாக செயல்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரே நேரடியாக வழக்கு பதிவு செய்து தொடர்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரம் வழங்க வேண்டும் என அரசிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





