இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் நாட்டில் கடும் உணவுப் பற்றாக்குறை நிலவியது; குழந்தைகள் உட்பட பலர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டனர். என்ன உற்பத்தி செய்ய வேண்டும், என்ன உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குழப்பத்தில் மக்கள் தவித்த நிலையில், நேரு தலைமையிலான அமைச்சரவை உணவு ஆராய்ச்சி அவசியம் என முடிவு செய்தது.

ஆனால் இடவசதி மற்றும் நிதி குறைபாடு இருந்ததால், மைசூரில் இருந்து ஒரு அபூர்வமான தீர்வு வந்தது. மக்கள் நலனுக்காக 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள செலுவாம்பா அரண்மனையை அரச குடும்பம் 100 ஆண்டு குத்தகைக்கு வழங்க முன்வந்தது; இதற்காக பெற்ற தொகை ஒரு ரூபாய் மட்டுமே. 1948ல் மத்திய அரசிடம் அரண்மனை ஒப்படைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன; 1950ல் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி இதைத் திறந்து வைத்தார்.

இன்று அந்த வளாகம் மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) ஆக செயல்படுகிறது. உணவு உற்பத்தியை பதப்படுத்தி பாதுகாப்பது, உணவு வீணாவதைத் தடுப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து போன்ற துறைகளில் இது கவனம் செலுத்தி வருகிறது. மூலப்பொருட்களை பாக்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வந்த வளர்ச்சியிலும் இந்நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

குலாப் ஜாமுன் ப்ரீ மிக்ஸ், சிக்கன் வேபர்ஸ், ஸ்பைஸ் ஓலியோரெசின்ஸ், ஸ்பைஸ் எசென்ஷியல் ஆயில்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்காக தனியார் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப சுமார் 460 வகையான ‘பார்முலா’களை உருவாக்கி வழங்கியுள்ளது. இந்நிறுவனத்திடம் உரிமம் பெற்று சுமார் 5,000 நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. ககன்யான் திட்டத்தில் விண்வெளியில் வசிக்கவுள்ள இந்தியர்களுக்காக கடலை மிட்டாய், சியா சீட்ஸ் போன்ற உணவுகளை பரிந்துரைத்ததுடன், இட்லி, தோசை போன்றவற்றை தயாரிக்கும் இயந்திரங்களையும் உருவாக்க உதவி செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி சுஹாஸ் கூறியதாவது: அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களில் முக்கிய கவனம் செலுத்தி, அறுவடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மதிப்பு கூட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கச் செய்வதே நோக்கம். 14 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள் உள்ள இந்நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமாகவும் குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றங்கள், துறைமுகங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் 3,000 மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்து, கலப்படமற்ற மற்றும் பாதுகாப்பான உணவுத் தேர்வு ஆரோக்கியத்திற்கு அவசியம் என வலியுறுத்துகிறது.