திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், உதயநிதி தொடர்ந்து ஆபாசம், அவதூறு மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட கீழ்த்தரமான பேச்சுகளை மேற்கொண்டால், ஸ்டாலினுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு போன்றதே அடுத்த தேர்தலில் உதயநிதிக்கும் நேரிடலாம் என்று கூறினார்.

அரசுத் திட்டங்கள் சிறப்பாக மக்களிடம் சென்று சேர்வதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருவதாகவும், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்லாட்சியாக நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார். கோவில் சொத்துக்களை பாதுகாப்பதில் இந்த ஆட்சி தீவிரமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பல இடங்களில் கோவில் நிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக மக்கள் நேரடியாக புகார் அளித்து வருவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டினார். ஸ்ரீரங்கம் கோவில் நிலம் தொடர்பாகவும் தொடர்ச்சியாக புகார்கள் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த புகார்களை ஆதாரங்களுடன் பரிசீலித்தபோது முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததாகவும், கோவில் நிர்வாகம் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். எப்ஐஆரை ரத்து செய்ய கோரி நீதிமன்றம் சென்ற முயற்சி தோல்வியடைந்ததாகவும், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவில் நிலங்களை மீட்டோம் என்று கூறும் திமுக ஆட்சிக்காலத்திலேயே பல கோவில்களில் திமுகவினர் நிலங்களை அபகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தீர்ப்பே முடிவை நிர்ணயிக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் மீண்டும் வலியுறுத்தினார்.