ஜெய்ப்பூர்: தன் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா சுமத்திய குற்றச்சாட்டுகள் “தொழில்முறை பொறாமை” காரணமாக இருக்கலாம் என்றும், அவை ஆதாரமற்றவை என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா பகிரங்கமாக மறுத்துள்ளார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றிய சர்மா மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பணிநேர்மை குறித்து சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறி, நீதிபதி மேத்தா தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் கொலீஜியத்திற்கு புகார் கடிதங்கள் அனுப்பியிருந்ததாக தகவல் வெளியாகியது.

இந்த சர்ச்சை தொடர்ந்த நிலையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் அகர்வால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சர்மா விடுப்பில் சென்றிருந்த நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உயர் நீதிமன்றத்தின் உள்விவகாரங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலையிடுவதற்கு என்ன உரிமை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தன் மீது வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தையும் நீதிபதி மேத்தாவே தூண்டியதாக அவர் குற்றம்சாட்டினார்.

குறுகிய கால பணிக்காலத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை தீர்த்து வைத்ததாக கூறிய சர்மா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என மீண்டும் வலியுறுத்தினார்.