போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை நாடு முழுவதும் கறாராக வசூலிக்க வேண்டும் என்றும், நிலுவைத் தொகை செலுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து தொடர்பான சேவைகளை வழங்காமல் முடக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்ட பிறகே சேவைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு விசாரித்த வழக்கில், நாடு முழுவதும் விதிமீறல்களுக்கு ‘இ-சலான்’ மூலம் மின்னணு அபராத சீட்டுகள் வழங்கப்பட்டாலும், பலர் அபராதம் செலுத்துவதில் தாமதம் செய்கிறார்கள்; வாகன விற்பனை அல்லது உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யும் நேரத்தில் மட்டுமே பலர் நிலுவையைச் செலுத்துகிறார்கள் என குறிப்பிடப்பட்டது. இதனால் அபராதத் தொகைகள் பெருமளவில் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
விசாரணையில், பல்வேறு காலக்கட்டங்களில் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.49,194.05 கோடி எனவும், இதுவரை ரூ.25,175.05 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இ-சலான் வழங்குவது மட்டுமல்ல, அதை வசூலிப்பதே முக்கியம்; அதுவே சாலை போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவும் என அமர்வு வலியுறுத்தியது.
இதன் அடிப்படையில், அபராதம் செலுத்தாத வாகனங்களை மத்திய அரசின் ‘பரிவாஹன்’ இணையதளத்தில் கறுப்பு பட்டியலில் சேர்த்து, வாகன விற்பனை அல்லது உரிமையாளர் பெயர் மாற்றத்தைத் தடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நிலுவை அபராதம் செலுத்தும் வரை எப்.சி. (தகுதி சான்றிதழ்), மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ், ஆர்.சி. புதுப்பிப்பு/நகல் ஆர்.சி., ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட இணையவழி சேவைகள் வழங்கக் கூடாது என்றும், தொடர்ச்சியாக விதிமீறி அபராதம் செலுத்தத் தவறும் ஓட்டுநர்களின் உரிமங்களை தேவையெனில் தற்காலிகமாக ரத்து செய்ய தயங்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
இதனுடன் தொடர்பாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் நடந்த வாகன சோதனையில் ஒரு இருசக்கர வாகன ஓட்டுநருக்கு 126 முறை விதிமீறல் பதிவாகி, ரூ.10.30 லட்சம் அபராதம் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. ஹெல்மெட் அணியாமல் சென்றது, நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கியது, மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.





