திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய அரசின் நிலைப்பாடே தற்போதைய அரசும் தொடருகிறதா அல்லது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வு கேட்டது.

விசாரணையின் போது, தமிழக அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், முந்தைய நிலைப்பாடே தொடர்கிறது; மாற்றம் இல்லை என கூறினார்.

இதையடுத்து, தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை நவம்பர் 17க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.