மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகப் பதிவான வழக்கில், தி.மு.க. பகுதி செயலர் ராம்குமார் (48) நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராம்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து இந்த கைது நடந்தது. இதே வழக்கில், பத்திரப்பதிவு செய்த அப்போதைய ஸ்ரீரங்கம் சார்-பதிவாளர் வனிதா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
தன் மனுவில், குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தை புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் குடும்பத்தினரிடமிருந்து ரூ.2.90 கோடிக்கு வாங்கியதாகவும், சார்-பதிவாளர் கள ஆய்வு செய்த பிறகே பதிவு செய்யப்பட்டதாகவும் ராம்குமார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரினார்.
விசாரணையில், மனுதாரர்கள் தரப்பில் ‘நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் இல்லை; பதிவு நேரத்தில் கோவில் நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ‘பணம் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரம் இல்லை; காவலில் வைத்து விசாரிப்பது அவசியம்’ என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஸ்ரீரங்கம் கோவிலுக்கான அறப்பணிக்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் நிலத்தை குடியிருப்புகளாக மாற்றுவதற்காக தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மனை அப்ரூவல்களுக்கு இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.





