டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் இதுவரை 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அதன் பின்னர் “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற அணுகுமுறையுடன் குடியேற்ற விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

விசா விதிமுறைகள் மீறல், குற்றச் செயல்கள், மோசடி, அமெரிக்காவுக்கு எதிரான வன்முறைக்கு ஆதரவு அளித்தல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் “பிறப்பு சுற்றுலா” தொடர்பான சுமார் 2,300 விசாக்களும் உள்ளடங்கும் என கூறப்பட்டுள்ளது.

நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையை “வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்” என வெளியுறவுத்துறை குறிப்பிட்டு, அமெரிக்க மக்களை பாதுகாப்பதில் தங்களின் உறுதியை இது வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.