மும்பை: அன்றாட சவால்களை சமாளிக்க மக்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்; இல்லையெனில் சிறிய ஏமாற்றங்களே அவர்களை அச்சம் மற்றும் விரக்திக்குள் தள்ளிவிடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மும்பையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தேசமும் தர்மமும் பிரிக்க முடியாதவை என்றார். தேசத்தின் நோக்கமே தர்மம் என்றும், தர்மம் தேசத்தைத் தாங்கி நிற்க உதவுகிறது என்றும் கூறி, இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என விளக்கினார்.

அடையாளம் குறித்து பேசும்போது, சூழ்நிலைக்கு ஏற்ப நகரம் அல்லது மாநில அடையாளம் முன்னிலையாகலாம்; ஆனால் வெளிநாட்டிற்குச் செல்லும் போது அனைவரும் “இந்தியர்கள்” என்ற ஒரே அடையாளமாக மாறுகிறோம் என்றார். ‘ஞானேஸ்வரி’ நூலை மொபைலில் படிக்கவும் கேட்கவும் உருவாக்கப்பட்ட செயலியை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; அவர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், மனிதன் யார், அவனது இலக்கு என்ன, வாழ்க்கையின் பொருள் என்ன, உலகத்தின் நோக்கம் என்ன போன்ற கேள்விகளைப் பற்றிய சிந்தனைகள் பகவத் கீதையில் அடங்கியுள்ளன என்றும், அது காலத்தால் மாறாத உண்மைகளைப் பேசுவதால் அவை எப்போதும் மாறுவதில்லை என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.