புதுடில்லி: வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) முடிந்த பின்னர், இறுதி பட்டியலில் இருந்து விடுபட்ட தகுதியான வாக்காளர்களை கண்டறிந்து மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்துமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது. இதுவரை மொத்தம் 13 கோடி பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.1 அன்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்திய பின்னர் வெளியிட்ட உத்தரவில், வாக்காளர் சேர்க்கை தொடர்ச்சியான நடைமுறை என்றும், எஸ்ஐஆர் காலத்தில் விடுபட்டதற்காக மட்டும் எந்த தகுதியான குடிமகனுக்கும் வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது என்றும் ஆணையம் வலியுறுத்தியது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) எஸ்ஐஆர் முன் பட்டியல் மற்றும் தற்போதைய பட்டியலை ஒப்பிட்டு, பெயர் விடுபட்டவர்களின் பட்டியலை ஓட்டுச்சாவடி வாரியாக தயாரித்து, வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதி உறுதி செய்யப்பட்டால், உடனடியாக படிவம்-6 மூலம் அவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பி.எல்.ஓ.வும் வாரத்திற்கு குறைந்தது 20–25 வாக்காளர்களை நேரில் சந்தித்து சரிபார்த்து, இந்த பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கள ஆய்வின்போது 18 வயது பூர்த்தி அடைந்த புதிய/இளம் வாக்காளர்களையும் கண்டறிந்து படிவம்-6 மூலம் சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி வாரியாக தயாரிக்கப்படும் பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜன்ட்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் வழங்கப்படும். பி.எல்.ஓ. கள ஆய்வு அறிக்கையுடன் படிவம்-6 விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்-1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள்-1960 அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும், விடுதிகளில் வசிப்பவர்கள், தொழிலாளர் குடியிருப்புகள், வீடற்றவர்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் விண்ணப்பிக்க உதவும் வகையில் ஓட்டுச்சாவடி அளவில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.