மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் ஹிந்தி எழுத்து இடம்பெற்றதாகக் கூறி இரண்டு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததற்கு, நெடுஞ்சாலைத் துறைக்குள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நடவடிக்கை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம்–நாசரேத் சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வழிகாட்டி பலகை நிறுவப்பட்டது. அதில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வழிகளும் தொலைவு விவரங்களும் குறிப்பிடப்பட்டு, ஊர் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இடம் பெற்றிருந்தன.

புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உதவி கோட்டப் பொறியாளர் பூமிநாதன் மற்றும் உதவி பொறியாளர் முத்துலட்சுமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மாநிலத்தின் இருமொழிக் கொள்கை மாற்றமற்றது என்றும், துறை ரீதியான விசாரணையில் கவனக்குறைவால் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழியில் பலகை அமைக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அந்த பலகை உடனடியாக மாற்றப்பட்டு, இருமொழியில் புதிய பலகை பொருத்தப்பட்டதாகவும், மேலதிக விசாரணை தொடர்வதாகவும் கூறினார்.

இதற்கிடையில், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் சங்க நிர்வாகிகள் சிலர், இந்த சாலை மேம்பாட்டுப் பணி மத்திய–மாநில பங்களிப்புடன் நடைபெற்றதாகவும், மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி வாயிலாக 80% நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். இத்தகைய திட்டங்களில் அறிவிப்பு பலகையில் ஹிந்தி இடம்பெற வேண்டும் என விதிமுறைகளில் இருப்பதாகவும், அதையே அதிகாரிகள் பின்பற்றியதாகவும் அவர்கள் கூறினர்.

இதனால் பணியிடை நீக்கம் போன்ற கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், விதிமுறைகளைப் பின்பற்றலாமா என்ற சந்தேகத்தை உருவாக்குவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசு இந்த தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.