லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது, குற்றவியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகளை தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச புகாரில் கையும் களவுமாக பிடிபட்டதாக கூறப்பட்டு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளை எதிர்கொண்டு வரும் சுனிதா அகிலின் மெபெல், எட்டுராஜ், கணேசமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதி பி.புகழேந்தி, பல ஆண்டுகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் சஸ்பெண்டிலேயே வைத்திருப்பது, அவர்கள் எந்தப் பணியும் செய்யாமல் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வாழ்வாதாரப்படி பெற வழிவகுக்கும் என்றும், இது நிர்வாகத் திறமையின்மையை காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

குற்றவியல் வழக்குகளில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் துறைசார் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் நிகழ் தரவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டை உறுதி செய்து தண்டனை வழங்க முடியும். எனவே குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புக்காக துறை விசாரணை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், நடத்தை விதிகளை மீறி ஊழலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகளுக்கு பயம் ஏற்பட்டு தடுப்பு விளைவு உருவாகும் என்றும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அரசு ஊழியர் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.