இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானிகளை, ‘பிளைதுபாய்’ விமானங்களில் டெல் அவிவ் நோக்கி இயக்க அனுமதித்ததே பாதுகாப்பு குளறுபடிக்கு காரணமாக இருக்கலாம் என இஸ்ரேல் ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அந்த செய்திகளின்படி, கடந்த மாதம் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் புறப்பட்ட ‘பிளைதுபாய்’ விமானத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் துணை விமானியாக பணியாற்றினார். அவர் விமானத்தை கடத்த முயன்றதாகவும், அதை இந்தியாவைச் சேர்ந்த முதன்மை விமானி ஸ்மிட் மச்சார் முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலுடன் தூதரக உறவில் இல்லாத நாடுகளைச் சேர்ந்த விமானிகள், இஸ்ரேலுக்குள் விமானங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் ஓமன் நாட்டைச் சேர்ந்த பல விமானிகள் ‘பிளைதுபாய்’ விமானங்களை டெல் அவிவுக்கு இயக்கி வந்ததாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விமானிகளின் குடியுரிமையை இஸ்ரேல் அதிகாரிகள் தனியாக சரிபார்க்காமல், விதிகளைப் பின்பற்றும் பொறுப்பை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமே விட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘பிளைதுபாய்’ விமானங்களை இயக்குவதற்கான விதிகளில், இஸ்ரேலுடன் நல்லுறவை பேணும் நாடுகளைச் சேர்ந்த விமானிகள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதை இஸ்ரேல் விமான போக்குவரத்து அமைச்சகமும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் அதிகாரிகளின் அலட்சியம் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.





