இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரின் துணிச்சலான செயல்பாட்டை பாராட்டி, ரூ.1 கோடி வெகுமதி வழங்குவதாக மேன்கைண்ட் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.

செய்தி விவரப்படி, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி கடந்த செப்.30 அன்று ‘பிளைதுபாய்’ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தை மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கேப்டன் ஸ்மிட் மச்சார் இயக்கினார்.

விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்ஹமாமி கத்தியால் கேப்டன் ஸ்மிட் மச்சாரை குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நிலையிலும் அவர் துணிச்சலுடன் செயல்பட்டு பலரின் உயிர்களை காப்பாற்றியதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தற்போது கேப்டன் ஸ்மிட் மச்சார் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கட்டான சூழலில் காட்டிய தியாகம் மற்றும் ஆளுமைக்கு நன்றியினை வெளிப்படுத்தும் வகையில், ஸ்மிட் மச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என மேன்கைண்ட் பார்மா தெரிவித்துள்ளது.