புதுடில்லி: பிளை துபாய் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான பிரச்னையை விமானி ஸ்மித் மச்சார் சமயோசிதமாக சமாளித்தது “கடவுளின் அருள்” மற்றும் அவருக்குள் இருந்த மனவலிமை காரணம் என அவரது தந்தை பூபேந்திர மச்சார் தெரிவித்தார்.

சம்பவம் நடந்ததும் மற்ற பெற்றோர்களைப் போலவே தங்களுக்கும் பயமும் பதற்றமும் ஏற்பட்டதாகவும், உடனடியாக விளக்கு ஏற்றி வழிபட்டதாகவும் அவர் கூறினார். இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு யாரும் முன்பே முழுமையாக தயாராக இருக்க முடியாது; ஆனால் மகன் தனது முழுத் திறனையும் பயன்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.

டாக்டர்கள் கூறியபடி குணமடைய சிறிது காலம் ஆகும் என்றும், தலை மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பூபேந்திர மச்சார் கூறினார். தலையில் சிகிச்சை செய்யப்பட்டு தையல் போடப்பட்டதாகவும், அனைத்துத் துல்லியமான விவரங்களை இப்போது கூற முடியாவிட்டாலும் காயங்கள் தீவிரமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 17 ஆண்டுகளாக ஸ்மித் விமானம் ஓட்டி வருவதாகவும், அந்த காலத்தில் பல விமானிகளை வழிநடத்தியுள்ளதாகவும், பணியைத் தாண்டி வேறு எதையும் அதிகமாக சிந்திக்காமல் பறப்பில் கவனம் செலுத்துபவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் ஸ்மித்துடன் பணியாற்றிய விமானி டீனா கோஸ்வாமி, அவர் பணிவானவர் மற்றும் அனைவரையும் மதிப்பவர் என கூறினார். விமானிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபயிற்சி வழங்கப்படுவதாகவும், அவசரநிலையில் உடனடியாக செயல்பட பயிற்சி இருந்தாலும் சரியான தருணத்தில் அதை நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார். காக்பிட் அவசரநிலைகள் பொதுவாக இருவர் கொண்ட குழுவாக கையாளப்படுவதாகவும், பிளை துபாய் சம்பவத்தில் ஸ்மித் பயிற்சியை சரியான நேரத்தில் பயன்படுத்தியது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.