துபாய்: பிளை துபாய் விமானத்தில் நடுவானில் நடந்த தாக்குதல் மற்றும் விமானத்தை கவிழ்க்க முயன்ற சம்பவம் பயங்கரவாதச் செயல் என ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

துபாய்–டெல் அவிவ் இடையேயான பிளை துபாய் விமானத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து விமானத்தை கீழே கொண்டு வர முயற்சி நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே தீவிரவாதக் கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட யுஏஇ, தற்போது இதை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ளது.

யுஏஇ அதிபரின் தூதரக ஆலோசகர் அன்வர் கர்காஷ், எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மேலும், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை யுஏஇ அரசு “உண்மையான ஹீரோ” என பாராட்டியுள்ளது.

தாக்குதலில் கடுமையாக காயமடைந்த நிலையிலும், காக்பிட் கதவைத் திறந்து வைத்து பிற ஊழியர்கள் உள்ளே வந்து உதவ வழிவகுத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்னணித் தொடர்புகள் மற்றும் திட்டமிடல் குறித்து யுஏஇ அட்டர்னி ஜெனரல் தலைமையிலான சிறப்புக் குழு தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.