சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு புறப்பட இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், ரன்வேயில் ஓடத் தொடங்கியபோது திடீரென ஏற்பட்ட இயந்திர தொடர்பான எச்சரிக்கையால் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணியர் மற்றும் விமானக் குழுவினர் உட்பட 322 பேர் இருந்த நிலையில், எச்சரிக்கை அலாரம் ஒலித்ததும் விமானி உடனடியாக புறப்பாட்டை கைவிட்டு விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

பின்னர் விமானம் இழுவை வண்டி மூலம் ரன்வேயிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு ‘பே’ எனும் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டது. பயணியர் லவுஞ்ச் பகுதியில் தங்க வைக்கப்பட்ட நிலையில், பொறியாளர்கள் கோளாறை சரிசெய்ய முயன்றனர்.

இன்று அதிகாலை 5 மணிவரை பழுது சரியாகாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விதிமுறைகளின்படி பயணியர் அருகிலுள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.