இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி விமானத்தை கடத்த முயன்றதாகவும், இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் நடந்த சம்பவத்தைப் பதிவு செய்ததாக கூறப்படும் 45 விநாடி வீடியோவை இஸ்ரேலின் ஐ24 நியூஸ் வெளியிட்டது. அதில், ரத்தக்கறை படிந்த உடையுடன், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் துணை விமானி முழங்காலிட்டு அமர்ந்திருப்பதும், பயணிகள் தொடர்ந்து “போலீஸ் மட்டும்” என கூறுவதும் காணப்படுகிறது.
வீடியோவில் கேட்கும் உரையாடல்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட நேரம் துணை விமானியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பின்னர் போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தது தெளிவாகிறது.
இதனிடையே, துணை விமானியை பிடித்ததாக கூறும் இரண்டு பயணிகள் நியூயார்க் போஸ்டுக்கு அளித்த பேட்டியில், “அவரின் கைகட்டுகளை அவிழ்க்க பிளைதுபாய் குழுவினர் கேட்டனர்; காரணம் தெரியாததால் சந்தேகம் ஏற்பட்டது” என தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் ஏற்பட்டபோதும், எந்த சூழ்நிலையிலும் அவரை விடுவிக்க முடியாது என்று தாங்கள் உறுதியாக கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
மேலும், விசாரணைக்காக அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்பதால் ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கியதாகவும், சம்பவத்தில் விமானப் பணியாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த பயணிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பாக நிலைமை முடியும் வரை தாங்களே கட்டுப்பாட்டில் இருப்பதாக குழுவினரிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்.





