கொல்கட்டா: ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் தலைவர் ஹுமாயுன் கபீர், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிந்ததும் தமிழகம் வந்து, த.வெ.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜயை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுமாயுன் கபீர், முன்னதாக மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசில் இருந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் அவர் கூறிய ஒரு சர்ச்சையான கருத்தைத் தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னர் ‘ஆம் ஜனதா உன்னயன்’ என்ற கட்சியை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தன் நோக்கம் பா.ஜ.க.வின் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்பதே எனக் கூறிய அவர், பழமையான கட்சிகளை அணுகுவதை விட புதிதாக உருவான வலிமையான அரசியல் சக்தியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், திரிணமுல் காங்கிரஸ் தற்போது திசையில்லாமல் இருப்பதாக கூறிய அவர், மீண்டும் அக்கட்சியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.