துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக துணிந்த நடவடிக்கை எடுத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிறப்பு விருந்தினராக இஸ்ரேலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
செப். 30 அன்று நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், விமானத்தின் துணை விமானி விமானத்தை கடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிட் மச்சார் அதைத் தடுக்க முயன்றபோது கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடுமையான காயங்களுடன் இருந்தபோதும், விமானத்தில் இருந்த 180 பேரின் (174 பயணிகள் உட்பட) உயிர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவருக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்மிட் மச்சாரை இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கான “உண்மையான நாயகன்” என நெதன்யாகு பாராட்டியுள்ளார். மேலும், இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பாரம்பரிய தீப்பந்தம் (ஜோதி) ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்த ஸ்மிட் மச்சார், தனது உயிரைக் காப்பாற்றுவதில் ஒரு இஸ்ரேல் பல் மருத்துவர் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார். அவரை நேரில் சந்திக்க இஸ்ரேலுக்கு வர ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்; நெதன்யாகு அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்தினார்.





