நடப்பு ஆண்டுக்கான லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் அடங்கிய துறை சார்ந்த பார்லிமென்ட் நிலைக்குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோருக்கு மீண்டும் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பார்லிமென்ட் நிலைக்குழுக்கள் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அமைச்சகங்களின் பட்ஜெட், கொள்கைகள் மற்றும் சட்ட முன்மொழிவுகள் உள்ளிட்டவற்றை ஆண்டு முழுவதும் ஆய்வு செய்து மதிப்பாய்வு செய்வதே இக்குழுக்களின் முக்கிய பணி. கட்சிகளின் எம்.பி. பலத்தை அடிப்படையாகக் கொண்டு தலைவர் பதவிகள் பகிரப்படுவதால், இவை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த மறுசீரமைப்புக்கான உத்தரவை ராஜ்யசபா தலைவர் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வெளியிட்டனர். இதன் மூலம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். இரண்டு முக்கிய நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகளை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய நியமனங்களில், வெளியுறவு விவகாரங்கள் நிலைக்குழு தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயத் துறை நிலைக்குழு தலைவராக காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக நிலைக்குழு தலைவர் பதவி திரிணமுல் காங். எம்.பி. டோலா செனிடமிருந்து பா.ஜ. ராஜ்யசபா எம்.பி. சுதான்ஷு திரிவேதிக்கு மாற்றப்பட்டுள்ளது; ரசாயனம் மற்றும் உரங்கள் நிலைக்குழு தலைவர் பொறுப்பு திரிணமுல் காங். எம்.பி. கீர்த்தி ஆசாதிடமிருந்து ககோலி கோஷ் தஸ்திதாருக்கு வழங்கப்பட்டுள்ளது.





