புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் குடிசை வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பம், பெண் கட்டுமான தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு உரிய நிவாரணம் ஐந்து ஆண்டுகளாக கிடைக்கவில்லை என முதல்வரிடம் முறையிட்டுள்ளது.

குடும்பத்தின் தகவலின்படி, நாக ஜோதி என்பவர் 2018ல் கணவர் இறந்ததற்கு பின் மூன்று பிள்ளைகளின் பொறுப்பை தனியாக ஏற்றார். கொரோனா ஊரடங்கு காலத்தில், 2021 மே 8 அன்று கட்டட வேலைக்கு சென்ற நிலையில், உயர் மின்அழுத்த கம்பி தாக்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கணேஷ் நகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். எண் 245ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பம் தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆதரவு அளித்ததாகவும், நலவாரிய நிவாரணம், மின்வாரிய அலட்சியத்திற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகிய கோரிக்கைகளுடன் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய பதிவு எண் 21MZDR109307 என்பதை குறிப்பிட்டு, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் விபத்து அறிவிப்பு படிவத்தில் ‘பணியிடத்து விபத்து மரணம்’ விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரிடம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சமர்ப்பித்ததாக குடும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தகவலும், உதவியும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் இளநிலை பட்டம் முடித்த இளைய மகள் யோகேஸ்வரி, ஆதரவின்றி குடும்பம் தவிப்பதாக கூறி, தங்களுக்கான நிவாரணம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.