கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. தனித்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் தோல்வி கண்டது; காங்கிரஸ் 293 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இண்டி கூட்டணியில் இருந்தாலும், ராகுல் காந்தியை மம்தா கடுமையாக விமர்சித்து வந்ததாகவும், அதனால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சோனியா காந்தியுடன் அவர் நட்புறவு வைத்திருந்ததாக தகவல்.
சமீபத்தில் டில்லியில் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்தில் மம்தா பங்கேற்று, சோனியா அருகிலேயே அமர்ந்து நீண்ட நேரம் பேசினார்; பரிசும் அளித்தார். கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை குறித்து அவர் கிண்டலாக பேசியதற்கு அங்கு இருந்த தலைவர்கள் கைதட்டி வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா, ராகுல், மம்தா மூவரும் ஒரே இடத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது. ராகுல் மம்தாவை பாசமாக “ஆன்டி” என அழைத்து, அவர் எடை குறைந்திருப்பதை குறிப்பிட்டதாகவும், தேர்தல் பிரசாரத்தால் உடல்நிலை பாதித்து எடை குறைந்ததாக மம்தா பதிலளித்ததாகவும் தகவல்.
இந்த சந்திப்பு, நீண்ட காலமாக இருந்த இருவருக்கிடையிலான கடுமையான அரசியல் மனக்கசப்பு குறைந்து, உறவு மென்மையடைந்ததற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.





