சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் ராமாயணத்தை பனை ஓலை ஏடாக வாசிக்கும் ஒரு குடும்ப வழக்கம் 175 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

சைவ மரபை முக்கியமாகக் கருதும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இக்குடும்பம், வைணவ பக்தியையும் போற்றும் அடையாளமாக வீட்டிலேயே ராமனின் வரலாற்றை ஏடு எடுத்து வாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கம் நெற்குப்பை இரணிகோயில் ந.பழ. குடும்பத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

குடும்ப தகவலின்படி, ந.பழ. நல்லகருப்பன் மற்றும் ந.பழ. முத்துபழனியப்பன் சகோதரர்கள் கொழும்புவில் வணிகம் செய்த காலத்தில், நல்லகருப்பனுக்கு வைசூரி அம்மை பாதிப்புக்குப் பிறகு பார்வை குறைபாடு ஏற்பட்டது. அது நீங்க வேண்டி ராமாயண ஏடு எழுதி வாசிப்பதாக அவர் பிரார்த்தனை செய்ததாகவும், பின்னர் குறைபாடு சரியானதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக 1850ஆம் ஆண்டு ராமாயண உரை பனை ஓலைகளில் எழுதப்பட்டு, அந்த ஆண்டிலிருந்து இடைவெளியின்றி ஆறாம் தலைமுறை வரை வாசிப்பு தொடர்ந்துவருகிறது. புரட்டாசி மாதத்தில் ஒரு சனிக்கிழமை ‘ஏடு படித்தல்’ தொடங்கி அடுத்த சனிக்கிழமை நிறைவு செய்யப்படும்.

பழைய தமிழ் எழுத்துரு வாசிப்பது சிரமமாக இருப்பதால், 1980ஆம் ஆண்டு ஏட்டிலுள்ளபடியே கைப்பிரதி புத்தகமாக தயாரிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து வாசிக்கப்படுகிறது; பனை ஓலை ஏடு பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது. இந்த வாசிப்பு நடைபெறும் நாட்களில் குடும்பத்தில் உற்சாகமும் குதூகலமும் பரவுவதாக நெற்குப்பை ந.பழ.மு. இல்லத்தைச் சேர்ந்த மா. ராமரத்தினம் தெரிவித்தார்.