லக்னோ: 2024 லோக்சபா தேர்தலில் அமேதியை விடுத்து ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட்டது “பயத்தால்” என்ற சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி.) எம்.பி. சிவ்பால் சிங் படேலின் கருத்து, உத்தரப் பிரதேச அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ராகுல் தனது பாரம்பரிய தொகுதியான அமேதியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்ததாகவும், அங்கிருந்து போட்டியிட அவர் தயங்கியதாகவும் படேல் கூறினார். இந்த நிலையில், எஸ்.பி. தலைவர் அகிலேஷ் யாதவ் தலையிட்டு ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு ராகுலை சமாதானப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராகுல் போட்டியிடவில்லை என்றால் அந்தத் தொகுதியில் எஸ்.பி. தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் என அகிலேஷ் எச்சரித்ததாகவும், அதன் பின்னரே ராகுல் போட்டியிட ஒப்புக்கொண்டதாகவும் படேல் கூறினார்.
கூட்டணி அரசியலை முன்வைத்து, எஸ்.பி. உடன் கூட்டணி இல்லையெனில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாது என்றும், எஸ்.பி. வாக்குகள் விழுந்ததால்தான் காங்கிரஸ் ஆறு இடங்களில் வென்றதாகவும் அவர் கூறினார். மேலும் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாகும் நிலையில், காங்கிரஸுக்கு வழங்கப்படும் 50 இடங்களை ஏற்றுக்கொண்டு திருப்தியடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





