மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறியது பொய்யென குற்றம்சாட்டினார். மக்களை ஏமாற்றவும், அனுதாப ஓட்டுகளை பெறவும் அந்த சம்பவத்தை அவர் பயன்படுத்தியதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2021ல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, அங்கு பிரசாரம் செய்தபோது காலிலும் இடுப்பிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. முதலில் மர்ம நபர்கள் காரின் கதவை இழுத்துத் தள்ளியதால் கால் நசுங்கியதாகவும், பின்னர் கூட்ட நெரிசலில் கதவு இடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

கொல்கத்தாவில் உள்ள அரசு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பிறகு காலில் கட்டுடன் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த பிரசாரங்களில் சக்கர நாற்காலியில் பங்கேற்றது, அனுதாப ஓட்டுக்காக காயத்தை முன்னிறுத்துவதாக அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

நந்திகிராமில் பா.ஜ.க. வேட்பாளர் ஹசிராணி ராத்தை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, பாங்கூர் நரம்பியல் நிறுவனத்தின் மருத்துவ அறிக்கைகளில் எலும்பு முறிவு அல்லது மூட்டு விலகல் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என சுவேந்து அதிகாரி கூறினார். சிறிய காயத்தை பெரிதாக்கி நாடகமாடியதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின் கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகவும், தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், முதல்வரின் இந்த குற்றச்சாட்டு மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.