ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 318 கிலோ கஞ்சாவை தூத்துக்குடி மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மீன் ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் லாரியில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைத்து, மாவட்ட கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில், மீன் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரிக்குள் தலா 159 கிலோ எடையுள்ள இரண்டு மூட்டைகளில் மொத்தம் 318 கிலோ கஞ்சா மறைத்து கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. லாரிக்கு முன்பாக சென்ற சொகுசு காரையும் நிறுத்தி அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கடத்தல் வழக்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஷ்வா கனகராஜ் (47), ஆந்திர மாநில காக்கிநாடாவைச் சேர்ந்த தன்வேல் (51), பிரகாசம் மாவட்ட தங்குடூரைச் சேர்ந்த யாதலா ஸ்ரீனிவாஸ் கல்யாண் (24) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி மற்றும் மகேந்திரா எக்ஸ்.யூ.வி. கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.





