சென்னை: செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு மேற்கொண்டு உயரதிகாரிகளின் பணியிடங்களை குறைப்பதும், அவசியமில்லாத பணியிடங்களை ரத்து செய்வதும் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க முடிவு செய்துள்ளது.

மாநிலத்தின் மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.3.50 லட்சம் கோடி எனவும், மொத்த செலவு ரூ.4.05 லட்சம் கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஊழியர் சம்பளச் செலவு ரூ.77,310 கோடி, கடன் வட்டி செலவு ரூ.76,452 கோடி, மானியங்கள் ரூ.1.72 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

அறிக்கையில், 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் குறிப்பிடப்பட்டுள்ளதால் கூடுதல் நிதி தேவை அதிகரிக்கிறது.

வருவாயை உயர்த்த டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கனிமங்கள் விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவு கட்டுப்பாட்டுக்காக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மறுசீரமைப்பின் கீழ், ஒவ்வொரு துறையிலும் எந்த பணியிடங்கள் அவசியம், எவை தேவையற்றவை என்பதைக் கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். வணிகவரி துறையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் பணியிடங்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதேபோல் பல துறைகளிலும் ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.