தமிழகத்தில் கல் குவாரி துறை மீது புதிய அழுத்தம் உருவாகியுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு கனிமப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டதால், ஜூலை 9 முதல் அக். 9 வரை வெளிமாநிலங்களுக்கு கற்கள் அனுப்ப முடியாமல் பல குவாரிகள் உற்பத்தியை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக 3,000க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கிய நிலையில், சுற்றுச்சூழல் தரக் கட்டுப்பாடு தொடர்பான சான்றிதழ்கள்/அனுமதிகள் பெறுவதில் தாமதம், அபராதங்கள் உள்ளிட்ட காரணங்களால் இயங்கும் குவாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர். தற்போது சில நூறு குவாரிகளே செயல்படுகின்றன; அங்கும் போதிய இருப்பு இல்லாததால் உள்ளூர் விற்பனைக்கே கற்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தற்காலிக தடை, எவ்வளவு கல் வெட்டி எடுக்கப்பட்டு உடைக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க அரசு எடுத்த நடவடிக்கை என கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசின் வருவாயை உயர்த்தும் திட்டங்களுக்கான முன்னோட்டமும் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் வெட்டி எடுத்த கற்களுக்கே தற்போது கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதாகவும், நீதிமன்ற வழக்குகள் காரணமாகவும் தொழில் பாதிக்கப்படுவதாகவும் குவாரி உரிமையாளர்கள் கூறினர்.

கிரஷரில் தயாராகும் ஜல்லியை விற்க ‘ராயல்டி’ செலுத்தி அனுமதி சீட்டு பெறும் நடைமுறைக்கு மேலாக, தற்போது ‘டிரான்சிட் பாஸ்’ முறையால் குறிப்பிட்ட காலத்துக்குள் விற்பனை செய்ய நெருக்கடி ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணைய அனுமதி பெற ஓராண்டுக்கு மேலாகும் நிலையில், ஏலம் எடுத்து கட்டிய தொகைக்கு வட்டி செலுத்தி நஷ்டம் ஏற்படுகிறது; 500க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன என்றும் தெரிவித்தனர்.

செப்டம்பர் 22 அன்று சென்னையில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு மற்றும் உயர் அதிகாரிகள், தமிழக கல் குவாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். விதிமுறைகளை பின்பற்றி முழுமையாக வரி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும், அபராதங்களுக்கு ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ முறையில் தள்ளுபடி கோரியதாகவும் சங்கம் தெரிவித்தது. மேலும், தடையில்லா சான்றிதழ் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும், ஏற்கனவே இயங்கும் குவாரிகளுக்கு அருகில் பின்னர் உருவாகும் கட்டிடங்கள் காரணமாக அனுமதி மறுக்கக் கூடாது என மனுவில் வலியுறுத்தி, தற்போதைய சூழலில் தொழிலை தொடர விருப்பமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது; கட்டுமான பணிகளுக்கான ஜல்லி, எம்-சாண்ட் தடையின்றி குறைந்த விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.