சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவை கடந்தும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி ‘பைக் ரேஸ்’ செய்ததாக புகார் எழுந்துள்ளது. பலத்த சத்தத்துடன் சென்ற வாகனங்கள் காரணமாக அப்பகுதி மக்களின் தூக்கம் கெட்டதாகவும், பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரண்டதாகவும், அந்த இடத்தில் இருசக்கர வாகனங்களின் சத்தம் மிக அதிகமாக இருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். அங்கிருந்து கோடம்பாக்கம் பிரதான சாலைகள் நோக்கி ரேஸ் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு ரேஸில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். சில இடங்களில் சாலையில் தடுப்புகளை வைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றாலும், அவர்கள் பல திசைகளாக சிதறி அதிவேகமாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்கிடையே கோட்டூர்புரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆர்.ஏ.புரம் பசுமை வழிச்சாலை பகுதியை சேர்ந்த குகன் (21) என்ற இருசக்கர வாகன மெக்கானிக், அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நண்பரின் வாகனத்தில் சர்தார் படேல் சாலையில் சென்றுள்ளார். சென்னை ஐ.ஐ.டி. அருகே கோட்டூர்புரம் மேம்பாலத்தில் கிழக்கு பக்கமாக சென்றபோது இரும்புத் தடுப்பு கம்பியில் மோதியதால் பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, வலது கால் முறிவு மற்றும் நெஞ்சுக் காயங்களுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விபத்து நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், கோட்டூர்புரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





