டெல் அவிவ்: துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற பிளை துபாய் விமானத்தில் இருந்த 172 பேரை காப்பாற்ற, இஸ்ரேலிய பயணிகள், இந்திய விமானி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானக் குழுவினர் இணைந்து செயல்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் தகவலின்படி, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அந்த முயற்சியை இந்திய விமானி ஸ்மிட் மச்சாரு முறியடித்ததாகவும், அவருக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த விமானியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சக அறிக்கையில், விமானத்தை நொறுக்கி பயணிகள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் ஜிகாதி பயங்கரவாதி செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தைரியமாக எதிர்த்த இஸ்ரேலிய பயணிகளுக்கு இந்திய விமானியும் அமீரக விமானக் குழுவினரும் துணை நின்றதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

இஸ்ரேலியர்கள், அமீரகவாசிகள் மற்றும் இந்தியர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்தது பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் எதிர்காலத்தை காட்டுகிறது என இஸ்ரேல் கூறியுள்ளது.