நாட்டின் பொருளாதாரத்தை பங்குச் சந்தை குறியீடுகள் மூலம் மட்டும் அளவிடும் பழக்கம் மாற வேண்டும் என்று ‘துக்ளக்’ இதழ் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள புத்தகங்களும் கல்லூரி பாடங்களும் மட்டும் போதாது; தெருக்களுக்கு சென்று மக்களின் வாழ்க்கையை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘குமுதம்’ குழுமம் தொடங்கிய புதிய தினசரி நாளிதழான **‘குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி’**யை தொடங்கி வைத்து அவர் பேசினார்.
காந்திய சிந்தனையாளர் தரம்பாலின் வழிகாட்டுதலுடன் நாடு முழுவதும் பயணம் செய்து பொருளாதாரத்தை நேரில் அறிந்ததாக கூறிய குருமூர்த்தி, அரசு மானியமோ பெரிய வங்கிக் கடனோ இல்லாமலேயே பல பகுதிகளில் தொழில் நகரங்கள் உருவாகியுள்ளன என்றார். இதற்கு குஜராத்தின் மோர்பி, தமிழகத்தின் திருப்பூர், கரூர் போன்ற நகரங்கள் உதாரணம் என குறிப்பிட்டார்.
மோர்பியில் ஆங்கிலம் தெரியாத பல தொழிலாளர்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்து உலக சந்தைக்கு பொருட்களை அனுப்புகின்றனர்; இதனால் தொழில் வளர்ச்சிக்கு ஆங்கிலக் கல்வியே அடிப்படை என்ற பொதுக் கருத்து கேள்விக்குள்ளாகிறது என்றார். வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளை சந்தித்தும் மோர்பியின் தொழில் பொருளாதாரம் மீண்டு நிற்கிறது என்றும் அவர் கூறினார்.
திருப்பூரிலும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் பிளஸ் 2-க்கு கீழ் படித்தவர்கள்; பட்டதாரிகள் குறைவாக இருந்தாலும் உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்கிறார்கள் என்றார். கரூரில் மேற்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு தொழில் முனைவோர் மட்டுமல்ல, குடும்ப அமைப்பும் முக்கியம்; குடும்ப நிர்வாகம், சேமிப்பு உருவாக்கம், தொழிலில் பங்களிப்பு ஆகியவற்றில் பெண்களின் பங்கு பெரிது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியர்களின் சேமிப்பில் பங்குச் சந்தையின் பங்கு குறைவு; நிலம், தங்கம் போன்றவையே பல குடும்பங்களின் முக்கிய முதலீடுகள் என்பதால், பங்குச் சந்தை செய்திகளையே பொருளாதார செய்திகளாக காட்டுவது இந்திய பொருளாதாரத்தின் பெரிய பகுதியை மறைத்து விடுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடித்தட்டு மக்கள் வரை நிதி விழிப்புணர்வு சென்றடைய வேண்டும்; பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாகம் சில நிபுணர்களுக்கே உரியதாக இருக்கக் கூடாது என்றார். சிறு தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் வரை எளிமையாக சென்றடைய ‘அறிவு, தெளிவு, செழிப்பு’ என்ற இலக்குகளுடன் புதிய நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விழாவில் ‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர்கள் எல். ஆதிமூலம், ஆர்ஆர். கோபால்ஜி, குமுதம் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வரதராஜன், ‘குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி’ ஆசிரியர் ரெங்கநாதன், குமுதம் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் தியாக செம்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





