சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை நிறுத்தக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டதாகவும், பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில் முதல்வர் விஜய் இதை அறிவித்த நிலையில், ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்படும் என அரசாணையும் வெளியிடப்பட்டது.

திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையில், “இந்தச் செலவை எவ்வாறு பண விரயம் என்று கூற முடியும்?” என்றும், “ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டடம் கட்ட வேண்டாம் என்று அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு எங்கிருந்து வருகிறது?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் குறிப்பிட்ட அமர்வு, மனுதாரர் எந்த ஆய்வும் காரணங்களும் இன்றி விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்ததாகவும் பதிவு செய்தது. பின்னர் மனுதாரரின் விருப்பத்தின் பேரில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.