தமிழ்நாடு அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி மனுத் தாக்கல் செய்திருந்தார். தனியார் பேருந்துகளிலும் இத்திட்டத்தை இழப்பீடு வழங்கி அமல்படுத்த வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும், திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலம் முழுவதும் பொருந்தும் முடிவை, இரண்டு வழித்தடங்களுக்கு மட்டுமே அனுமதி பெற்ற மனுதாரர் எவ்வாறு எதிர்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பியது. மேலும், சட்டசபையில் விதி 110ன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பை மட்டுமே மனுதாரர் சவால் செய்துள்ளார்; அரசாணையை அவர் எதிர்க்கவில்லை என்றும், இதை பொதுநல வழக்காக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.